அமெரிக்காவின் கனிவான, நகைச்சுவை மிகுந்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ மறைவு – AthibAn Tv

0

அமெரிக்காவின் கனிவான, நகைச்சுவை மிகுந்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ மறைவு

அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்த பிராங்க் கேப்ரியோ, கல்வி முடித்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு முனிசிபல் நீதிபதியாக பணியாற்றினார். பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர்.

வழக்குகளை விசாரிக்கும் அவரது பாணி மக்களை கவர்ந்தது. நீதிமன்றத்தில் ஆஜரானவர்களை குற்றவாளிகள் என அல்லாது நண்பர்களாகவே அணுகுவார். போக்குவரத்து விதிமீறலுக்கான ஆதாரக் காட்சிகளை காட்டியபின், மக்கள் தவறை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் வாழும் சூழல் மற்றும் நிலைமைகளை கருத்தில் கொண்டு, பல வழக்குகளை தள்ளுபடி செய்துவிடுவார்.

பல சந்தர்ப்பங்களில் அபராதம் விதித்த போதும், அந்தத் தொகையை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற நிதியால் ஈடுகட்டச் செய்வார். அவரது விசாரணைகள் “Caught in Providence” என்ற நிகழ்ச்சி பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு உலகளவில் பிரபலமானது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி, “உலகின் மிக கனிவான நீதிபதி” என்ற பட்டத்தைப் பெற்றார்.

2023ல் தன்னிடம் கணையப் புற்றுநோய் இருப்பதாக அவர் அறிவித்தார். அந்தச் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, 88 வயதில் பிராங்க் கேப்ரியோ காலமானார்.

இதுகுறித்து அவரது மகன் டேவிட் கேப்ரியோ, “தந்தைக்கு உலகம் முழுவதும் வழங்கப்பட்ட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அவரது நினைவாக, அனைவரும் சிறிதளவாவது கருணையை உலகில் பரப்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.