நியூயார்க் துப்பாக்கிச்சூடு: காவல் அதிகாரி உட்பட 5 உயிரிழப்பு, பலர் காயம் – AthibAn Tv

0

நியூயார்க் துப்பாக்கிச்சூடு: காவல் அதிகாரி உட்பட 5 உயிரிழப்பு, பலர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு காவல் அதிகாரி உள்பட குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள 44 மாடி அலுவலகக் கட்டிடத்தில், மாலை சுமார் 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் இந்த கட்டிடத்தில் அச்சமயம் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்தது.

காவல் துறைக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளின்படி, நீல நிற உடையும், கண் கண்ணாடியும் அணிந்திருந்த ஒருவன், கையில் துப்பாக்கியுடன் கட்டிடத்துக்குள் நுழைந்து சுடத் தொடங்கியுள்ளார். இந்த தகவலை நியூயார்க் காவல்துறையும், அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

அயர்லாந்து தூதரகம் மற்றும் நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில் உள்ளன. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில், தாக்குதலிலிருந்து தப்பிக்க மக்கள் நாற்காலிகள் போன்ற பொருட்களை பாதுகாப்புக்காக பயன்படுத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், சினிமா காட்சியைப் போல், கைகளை தலைக்கு மேல் உயர்த்தியபடி, ஒவ்வொருவராக கட்டிடத்திலிருந்து வெளியேறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தாக்குதலாளர் யார்?

இந்த தாக்குதலை லாஸ் வேகாஸ் பகுதியில் வசிக்கும் ஷேன் தமுரா என்பவர் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்; அவரது உடலில் கண்ட காயம் இதை உறுதிப்படுத்துகிறது.

முதற்கட்ட விசாரணையில், தமுரா ஹவாயில் பிறந்தவர்; பின்னர் லாஸ் வேகாஸுக்கு குடிபெயர்ந்தவர் என்றும், அவருக்கு குற்றச் செயல்களின் வரலாறு எதுவும் இல்லையெனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் துப்பறிவாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தற்போது உரிமம் காலாவதியாகி இருந்ததாகவும், கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த போது கட்டிடத்துக்குள் இருந்தவர்கள் கடும் பயத்தில் உறைந்தனர். முதலில் ஏதோ பீதியால் ஏற்பட்ட அலைச்சல் என்று நினைத்தபோதும், பின்னர் அது துப்பாக்கிச்சூடு என்பதை உணர்ந்ததாக சாட்சியர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, நியூயார்க் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.