அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீதான 145% வரிவிதிப்பை மேலும் 90 நாட்கள் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்க ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு 30% வரி விதித்தபோது, சீனாவும் பதிலடியாக தனது வரியை உயர்த்தியது. இதையடுத்து, ட்ரம்ப் 145% வரி விதிக்கத் தீர்மானித்து, இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் தீவிரமானது.
பின்னர், இரு நாடுகளும் கடந்த மே மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தி, பரஸ்பரமாக 90 நாட்கள் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. அதன் படி, ட்ரம்ப் அந்த கால அவகாசத்தை வழங்கினார்.
ஜூலை இறுதியில், இரு தரப்பினரும் ஸ்டாக்ஹோம் நகரில் மீண்டும் சந்தித்தனர். ஆனால் உடன்பாடு எதுவும் உருவாகவில்லை. இந்நிலையில், முதல் 90 நாள் அவகாசம் திங்கள்கிழமை முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ட்ரம்ப் மேலும் 90 நாட்கள் வரி நிறுத்தத்தை நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “சீனாவுக்கு விதிக்கப்பட இருந்த வரியை மேலும் 90 நாட்கள் நிறுத்தும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த நீட்டிப்பு காலத்தில், சீனப் பொருட்களுக்கு அமெரிக்க வரி 30% ஆகவும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவின் வரி 10% ஆகவும் இருக்கும்.