உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடுமையான விளைவுகள் – புதினுக்கு டிரம்ப் எச்சரிக்கை – AthibAn Tv

0

உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடுமையான விளைவுகள் – புதினுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 2022 பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் ரஷ்யா–உக்ரைன் போரில், தற்போது உக்ரைனின் சுமார் 22% பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், இரு நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

பிப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் ஆங்கரேஜ் நகரிலுள்ள ராணுவ தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: “ஆகஸ்ட் 15 அன்று புதினை சந்திக்கிறேன். அந்த சந்திப்பிற்குப் பிறகும் ரஷ்யா உக்ரைன் மீது போரை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகள் இருக்கும். அவை என்னவென்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதன் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பேன். பின்னர், அமெரிக்கா–ரஷ்யா–உக்ரைன் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்,” என்றார்.

ரஷ்ய அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி யூரி உஸ்கோவ் தெரிவித்ததாவது: “ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் நடைபெறும் சந்திப்பில், புதினுடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுனோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

அமெரிக்க தரப்பில், அதிபர் டிரம்புடன் வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் 2 உயர்நிலை அதிகாரிகள் வருவார்கள். பேச்சுவார்த்தை சாதகமாக முடிந்தால், டிரம்பும் புதினும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்கள்,” என்றார்.