‘ஒரு பேரழிவு நெருங்குகிறது’ – காசாவை கைப்பற்றும் இஸ்ரேல் திட்டத்திற்கு பிரான்ஸ் எதிர்ப்பு
இஸ்ரேல் காசா நகரத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது, இது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்று விமர்சித்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். அவர் கூறியதாவது, இந்த நடவடிக்கை நீண்டகாலப் போருக்கு வழி வகுக்கும் என்றும், மனித இழப்புகள் பெருமளவில் ஏற்படும் என்றும்.
ஏற்கனவே காசாவில் பொதுமக்கள் உணவுப் பஞ்சம் மற்றும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் காசா மாநகரத்தை கைப்பற்ற விரும்பும் நிலையில், சர்வதேச அமைப்புகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், வெளியிட்ட அறிக்கையில்:
“காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேல் நடவடிக்கை, முன்னரே இல்லாத பேரழிவுக்கும், நிரந்தர போருக்கும் வழிவகுக்கும். இதனால் அதிக பாதிப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கும் காசா மக்களுக்கும் ஏற்படும். காசாவை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை ஐநா மேற்கொள்ள வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை அனுப்பியுள்ளேன். ஐ.நா அமைப்பு காசாவை, அப்பாவி மக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேக்ரான், பாலஸ்தீனை ஒரு நாடாக கடந்த மாதம் அங்கீகரித்த பின்னர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் காசா கைப்பற்றும் ஒப்புதலை பல நாடுகள் கண்டித்ததற்கான கேள்விக்கு பதிலாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு:
“இஸ்ரேல் தனது படைகளை நியாயமான முறையில் பயன்படுத்துகிறது. ஹாமாஸின் தோல்வியை முழுமையாக்குவது தவிர வேறு வழி இல்லை. காசாவின் சுமார் 75% பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளன; மீதமுள்ள 2 பகுதிகள் – காசா மாநகர் மற்றும் அல் மவாசியில் உள்ள மத்திய முகாம்கள் பகுதி – இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளன” என்று தெரிவித்தார்.