அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு
முக்கிய பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வதில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று (ஆகஸ்ட் 12) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த உரையாடலில் அமெரிக்கா சார்பாக, வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோஜெர்ஃபோ தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவிற்கு, அந்த நாட்டின் ஐநா சிறப்பு செயலாளர் நபீல் முனீர் தலைமையிடினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பும் கூட்டறிக்கை வெளியிட்டது. அதில், “பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்கும் பொறுப்பில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உறுதியாக செயல்படுகிறார்கள். பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (PLA), ஐஎஸ்ஐஎஸ்-கொராசான், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற அமைப்புகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் தேவையான முறைகளை வளர்ப்பது முக்கியம்” என கூறப்பட்டுள்ளது.
பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் தொடர்ச்சியான வெற்றிகளை அமெரிக்கா பாராட்டுகிறது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், குஸ்தாரி பள்ளி பேருந்து மீது நிகழ்ந்த குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வலுவான அமைப்புகளை உருவாக்குவதின் அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஐநா உள்ளிட்ட உலகளாவிய அரங்கங்களில் நெருக்கமாக செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகால நெருக்கமான உறவு உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அமைதி, நிலைத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் கடந்த சில மாதங்களில் இரண்டு முறை அமெரிக்கா சென்று, இரு தரப்பு உறவை வலுப்படுத்த முயற்சித்தார். இதன் பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.