இந்தியா–பாகிஸ்தான் உறவு சிறப்பாக உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவை பேணிக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது:
“இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது, பிராந்தியத்திற்கும் உலகளாவிய அளவிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இது சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பை தருகிறது.
இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பே இருந்தபடி உள்ளது, அது நல்லது எனச் சொல்ல முடியும். அனைவரையும் அறிந்தும், அனைவருடனும் உரையாடும் அதிபர் இருப்பதால், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடிகிறது. எனவே, எங்கள் ராஜதந்திரிகள் இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணத் தீர்மானமாக செயல்படுகிறார்கள்.”
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இந்தியா–பாகிஸ்தான் இடையே மே மாதத்தில் நிகழ்ந்த மோதல் மிகக் கடுமையான நிலையை எட்டியிருந்தது. அப்போது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் உடனடியாக தலையிட்டு தாக்குதலை நிறுத்தினர். இந்த மோதல் பெரும் பேரழிவாக மாறுவதைத் தடுக்க அமெரிக்காவின் உயர்மட்ட தலைவர்கள் முக்கிய பங்கை வகித்தனர்.”
இதே நேரத்தில், அமெரிக்கா போர் நிறுத்தத்துக்கு காரணம் என வலியுறுத்தும் நிலையில், இந்தியா தொடர்ந்து, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இருதரப்பு ராணுவங்களுக்கிடையேயான நேரடி பேச்சுவார்த்தையால் தான் மோதல் நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி வருகிறது.