வங்கதேசத்தில் பள்ளி கட்டடத்தில் பயிற்சி விமானம் மோதி 19 பேர் உயிரிழப்பு, 16 மாணவர்கள் உட்பட பலர் பலி
வங்கதேச விமானப் படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி விமானம், டாக்கா நகரில் உள்ள பள்ளி கட்டிடத்தில் மோதியதில், 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வில் 50-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சோகம், வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூலை 21) ஏற்பட்டது. வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் 1:06 மணியளவில் F-7 BGI வகை பயிற்சி விமானம் புறப்பட்டு, சில நிமிடங்களுக்குள் பள்ளி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது” என்று கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இந்தச் சம்பவத்தில், பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள், விமானம் இயக்கிய முகமது டூகிர் இஸ்லாம் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் நிலத்தில் மோதி, ஒரு பெரிய வெடிச்சத்துடன் தீப்பற்றியது என்று அந்த பகுதி மக்கள் பகிர்ந்தனர். விபத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் விரைந்து சம்பவ இடத்தை அடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
“விமானம் பள்ளியின் நுழைவாயில் அருகே விழுந்தது. அந்த நேரத்தில் வகுப்புகள் இயல்பாக நடந்துகொண்டிருந்தன. காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன” என்று மைல்ஸ்டோன் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் ஷா புல்புல் கூறினார்.
இந்த துயர சம்பவம் குறித்து இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தனது எக்ஸ் பதிவில், “இந்த விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியவை. விமானப்படை, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நாட்டிற்கு மிகவும் வலி தரும் தருணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.