நைஜரில் 2 இந்தியர்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பு – ஒருவரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள்
மேற்குத் ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டில் நிகழ்ந்த ஒரு பயங்கரத் தாக்குதலில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
நைஜர் நாட்டில் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொழில், கட்டிடக்கொழில், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023 ஜூலை மாதத்தில் அந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தீவிரமடைந்தது.
அதன்பின், ராணுவம் மற்றும் அல்-காய்தா ஆதரவு கொண்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையில் உள்நாட்டுப் போர் தலையெடுத்துவந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் நடந்த இந்த மோதல்களில் 1,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கடுமையான சூழ்நிலையில், ஜூலை 15-ம் தேதி நைஜரின் டோஸ்ஸோ என்ற பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இவர்களில் 2 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை அந்த தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நைஜரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“டோஸ்ஸோ பகுதியில் நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நைஜர் அரசுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்நாட்டில் வசிக்கும் மற்ற இந்தியர்கள் அனைவரும் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இந்தியர்களில் ஒருவர் கணேஷ் கர்மாலி (வயது 39) என்பவராகவும், இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகரா பகுதியைச் சேர்ந்தவராகவும் தெரியவந்துள்ளது. மற்றொரு உயிரிழந்தவரின் பெயர் கிருஷ்ணன் என்றும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவராவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது மாநிலம் உறுதியாகத் தெரியவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட இந்திய தொழிலாளி, ரஞ்சித் சிங் என்பவர் என்றும், இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மூவரும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஸ்ரயில் லைட்டிங் எனும் நிறுவனத்தின் நைஜர் கிளையில் பணியாற்றி வந்தவர்களாக உள்ளனர்.