வேலைவாய்ப்பா, வேலை உத்தரவாதமா? – AthibAn Tv

0

வேலைவாய்ப்பா, வேலை உத்தரவாதமா?

நம் பாரதம், 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த நன்னாளில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய உரையில், 2047-ம் ஆண்டுக்குள் ‘விக் ஷித் பாரத்’ இலக்கை அடைய, இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப புரட்சி, பொருளாதார தன்னிறைவு ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார். இதைத் தொடர்ந்து, ‘வேலைவாய்ப்பு’ வெற்றிச்சொல்லை மீறி, ‘வேலை உத்தரவாதம்’ தொலைநோக்கு பார்வையை உருவாக்க வேண்டிய தருணம் இது!

தமிழ்நாடு, கல்வியில் முன்னோடியாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பல துறைகளில் பட்டம் பெறுகிறார்கள். இதில், பொறியியல் துறையில் 2.5 லட்சம், மருத்துவத்தில் 20,000–25,000, கலை மற்றும் அறிவியல் துறைகளில் 1.15–1.7 லட்சம், தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) 40,000-க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் ஆகிறார்கள். ஆனால், 40% பேருக்கு மட்டுமே தற்போதைய வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மீதமுள்ள 60% இளைஞர்களுக்கு வேலை உத்தரவாதம் உருவாக்க அவசியம்.

பிரதமர் மோடி தனது உரையில், இளைஞர்களின் திறனை மேம்படுத்த ‘திறன் இந்தியா’ (Skill India) திட்டத்தை வலுப்படுத்துவதாக உறுதி செய்தார். உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் இளைஞர்களை தயாரிப்பது முக்கியம் என்று வலியுறுத்தினார். இது தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பு. ஆனால், தொழில்துறை புரட்சியை துரிதப்படுத்தி, கல்வியை திறன் சார்ந்ததாக மாற்ற வேண்டும்.

வேலை உத்தரவாதத்திற்கு வழி:

  1. திறன் சார்ந்த கல்வி முறை: புதிய கல்விக் கொள்கை (NEP) முழுமையாக செயல்படுத்தி, 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் திறனையும் ஆர்வத்தையும் உளவியல் சோதனைகள் மூலம் அறிய வேண்டும். AI-ஐ பயன்படுத்தி, ஒவ்வொருவரின் திறனைப் பொருந்திய பயிற்சி அளிக்க முடியும். இதனால் இடைநிற்றல் விகிதம் குறையும்; வேலை உத்தரவாதம் கிடைக்கும்.
  2. கல்லூரிகளில் மாற்றம்: பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் பாடத்திட்டத்துடன் திறன் மேம்பாட்டு வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். வளாக நேர்காணல்களை (Campus Placements) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.
  3. தொழில்துறை முன்னேற்றம்: தமிழக அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு, நிலம், மின்சாரம், நிதி ஆதரவை உறுதி செய்ய வேண்டும். ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களை வலுப்படுத்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்த வேண்டும்.
  4. வெளிநாட்டு வாய்ப்புகள்: பொறியியல் மற்றும் மருத்துவத் துறையினர் உலகளாவிய வேலைவாய்ப்புகளை பயிற்சியால் உருவாக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு திறன் இடைவெளியைக் குறைக்கும் பயிற்சி திட்டங்கள் அவசியம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாடு மட்டும் 50 லட்சம் படித்த இளைஞர்களை உருவாக்கும். வேலைவாய்ப்பு இல்லையெனில், வேலையின்மை விரக்தியை உருவாக்கி, சமூக அமைதியை பாதிக்கும். இதைத் தடுக்க, ‘வருமுன் காப்போம்’ முழக்கத்துடன் வேலை உத்தரவாதத்தை முன்னுரிமை செய்ய வேண்டும்.

பிரதமர் மோடியின் ‘விக் ஷித் பாரத்’ பார்வையை நனவாக்க, தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும். என் 40 ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி, தொழில்துறை வளர்ச்சியால் வேலை உத்தரவாதம் உறுதி செய்யலாம். செயல் திட்டங்களை நிதி ஆயோக் மற்றும் தமிழக அரசிற்கு விரைவில் சமர்ப்பிக்க உள்ளேன்.

நமது இளைஞர்களின் ஆற்றல் நம் நாட்டை வல்லரசாக உயர்த்தும்! வாழ்க பாரதம், வளர்க தமிழகம்! ஜெய்ஹிந்த்!