நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள்: முக்கிய அம்சங்கள்

0

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘நிசார்’ எனப்படும் செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

புவியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை தீவிரமாக கண்காணிக்க, இஸ்ரோ மற்றும் நாசா ஆகியவை இணைந்து ‘நிசார்’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன. இந்த செயற்கைக்கோள், ஜூலை 30ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து, சுமார் ரூ.12,750 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளில் இரு முக்கியமான ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன. இவை பூமியின் மேற்பரப்பை மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் படம் பிடித்து தரவுகள் அனுப்பும் தன்மை கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் முழு மேற்பரப்பையும் விரிவாக ஸ்கேன் செய்து படங்களாக பதிவு செய்து அனுப்பும் திறன் இதில் உள்ளது. பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன, எங்கு நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கணிக்கவும்,

வனப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் ஏற்படும் மாற்றங்கள், நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளையும் முன்கூட்டியே கணிக்கவும் நிசார் செயற்கைக்கோள் பயன்படக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியில் நடைபெறும் இயற்கை மாறுதல்களைக் கண்காணித்து அதன் தாக்கங்களை ஆய்வு செய்வதே நிசார் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

Low Earth Orbit எனப்படும் தாழ்வான புவி வளையத்தில், சூரிய ஒத்திசைவு கொண்ட சுற்றுப்பாதையில், பூமிக்கு 747 கிலோமீட்டர் உயரத்தில் நிசார் நிலைநிறுத்தப்படும். இதன் ஆய்வு செயல்பாடு சுமார் 5 ஆண்டுகள் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.