மதுரையில் மருத்துவக் கழிவு குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டது – தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் – AthibAn Tv

0

மதுரையில் மருத்துவக் கழிவு குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டது – தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மதுரை மாநகராட்சியின் குப்பைத் தொட்டியில் மூட்டைகள் மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை மீது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விதிமுறைகளின்படி, வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுகளை மட்டும் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்ட வேண்டும். மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகள் தனியே பிரிக்கப்பட்டு, அதற்கென ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில், வைகை ஆறு மற்றும் கால்வாய்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. இதைத் தடுக்க, மாநகராட்சி ஆணையர் சித்ரா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பின்னர் ஓரளவு கட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி 35-வது வார்டு, செண்பகத் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர், மாநகராட்சி நகர் நல அலுவலர் இந்திராவிடம் தகவல் தெரிவித்தார். விசாரணை நடத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.