கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மரணமடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சுதாகர் ரெட்டி மறைவுச் செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பயணத்தை மாணவர் தலைவராகத் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தலைவர் கலைஞர் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளுக்காக தமிழ்நாடு வந்தபோதெல்லாம், அவரின் அன்பையும் தெளிவான பார்வையையும் நான் நெருக்கமாக கண்டுள்ளேன்.
நீதி மற்றும் மாண்பிற்கான போராட்டங்களுக்கு அவரது வாழ்க்கை என்றும் ஊக்கமாக இருக்கும். சுதாகர் ரெட்டி அவர்களை இழந்த அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”