மதுரை | தவெக மாநாடு முன்கூட்டியே துவக்கம்: பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவிப்பு
மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்க, தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பெரும் திரளான மக்கள் கூடிவருகின்றனர். இந்த சூழ்நிலையில், மாநாட்டை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே துவக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடையில் ஏற்கனவே அமர்ந்துள்ளனர்.
மாநாடு, மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் நடைபெறுகிறது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் விறுவிறுப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெயில் கொளுத்தும் சூழலில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொண்டர்களின் வருகை அதிகரித்ததனால், மாநாட்டை முன்கூட்டியே துவக்க முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மதியம் 3 மணிக்கே விஜய் மேடையில் வருவார் என ஆனந்த் அறிவித்துள்ளார்.
10 பேர் மயக்கம்
மாநாட்டுத் திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக, பலர் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வந்திருந்தனர்.
வெயில் காரணமாக, ராட்சத ட்ரோன்கள் மூலம் திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ட்ரோன்கள் மூலமாகவே தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகின்றன.
பாரப்பத்தியில் நடைபெறும் மாநாட்டிற்காக ஏராளமான வாகனங்கள் வந்து நிற்பதால், அப்பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும், விஜய்யை பார்க்க வித்தியாசமான முறையில் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். திருச்சியிலிருந்து வந்த ஒருவன், சிறிய சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.