வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக – AthibAn Tv

0

‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக

‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 2006–2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்ததா என அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. 2022-ல் அனுப்பிய சம்மனையை ஐ.பெரியசாமி ஒத்துழைத்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்குகளில் அமலாக்கத் துறை தலையிடாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என தெரிகிறது. விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பின்னரிலும் இன்றைய சோதனை சந்தேகங்களை எழுப்புகிறது.

விடுதலை பெற்ற வரலாற்றையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர வேண்டிய சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அரசியல் அவதூறுகளை அள்ளி வீசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அரசியல்வாதி போல குற்றச்சாட்டுகளால் வசை மாறி பொழிந்தார்.

பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றம் நிரூபித்துவிடும். திமுகவினர் கோழைகள் அல்ல; சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்.

‘சட்டவிரோத பண பரிமாற்றம்’ என சொல்லி அமலாக்கத் துறை செய்யும் அடாவடிகள் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத் துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது, ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் தெரிவித்துள்ளார்.

மூடா ஊழல் வழக்கில், “அரசியல் மோதல்களுக்கு ஏன் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது?” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார். சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், “ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது” என உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை தேர்தல் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. ’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என பேசும் ஒன்றிய அரசு ’வாக்கு திருட்டு’ அரசியலை நடத்துகிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது அம்பலப்பட்டு நிற்கிறது.

நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.

சில முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக கோப்புகள் நிலுவையில் உள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கலாகிவிட்டது.

இரண்டு–மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாக்குவது ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோள். பாஜக தலைவர்களும் அதன் அடிமைகளும் அவதூறுகளை பரப்புகின்றனர்.

இந்த அவதூறுகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள். திமுக தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் மக்கள் திமுகவுடன் ஓரணியில் நிற்கின்றனர்.