தனியார் மயமாக்கல் திட்டத்தை விசிக எதிர்த்து நிற்கும்: திருமாவளவன்
பெரம்பலூரில் ஊடகங்களுக்கு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தை எங்கள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்றார்.
சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தூய்மைப் பணியாளர்களுக்கான அரசுத் திட்டங்களை வரவேற்றாலும், பணி நிரந்தர கோரிக்கை திமுக ஆட்சியிலேயே அல்லாமல், அதிமுக காலத்திலிருந்தே நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
“அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது மீதமுள்ள 4 மண்டலங்களில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசின் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்ததைத் தனது கட்சி ஏற்றுக்கொள்ளும் நிலையிலும், விழா மரபை மதிக்க வேண்டும் என்றார். தமிழையும் தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஆளுநரின் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தேநீர் விருந்தை புறக்கணித்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களை தவெக தலைவர் விஜய் தனது வீட்டுக்கு அழைத்து சந்தித்ததை விமர்சித்த அவர், “மக்களிடம் தலைவர்கள் தான் செல்ல வேண்டும், அவர்களை அழைத்து வருவது ஜனநாயக முறை அல்ல. காலம் இதை அவருக்கு கற்றுத் தரும்” எனக் குறிப்பிட்டார்.