தமிழகத்தில் முக்கிய 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: அறநிலையத் துறை உத்தரவு
திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட, தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்திக்கும் ஆபத்துகளைத் தவிர்க்க 2018-ல் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவிலும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அரசாணையை தீவிரமாக அமல்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய 12 கோயில்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:
“மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி — இக்கோயில்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பிளாஸ்டிக் இல்லா கோயில்களாக அறிவிக்கப்படும்.
மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.