ஆகஸ்ட் 17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா: ஏற்பாடுகள் வேகமெடுக்கும் – கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

0

ஆகஸ்ட் 17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா: ஏற்பாடுகள் வேகமெடுக்கும் – கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் ஆகஸ்ட் 17 அன்று, தமிழர் எழுச்சி நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, அவர் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கில் ஆகஸ்ட் 16 (நாளை) விழா நடைபெற உள்ளது.

மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவின் இசை நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவின் நடன நிகழ்ச்சி நடைபெறும். பின்னர், “மதச்சார்பின்மையை காப்போம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

இதில் இயக்குநர் கே. பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனித ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார்.

இரவு 11 மணிக்கு வாழ்த்தரங்கம் தொடங்கும். இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவர் ஐ. லியோனி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வே. வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

இந்த விழாவில், விசிக பொதுச் செயலாளர்கள் ம. சிந்தனைச் செல்வன், துரை. ரவிக்குமார், எம்.எல்.ஏ-க்கள் எஸ். எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு. பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.