“தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
“அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை:
“நமது தேசத்தின் சிறப்புமிக்க 79-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், நீண்டகால ஒடுக்குமுறை காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உள்பட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்புற ஆக்கிரமிப்புகள் மற்றும் உள் குழப்பங்களிலிருந்து பாதுகாத்து, நமது அரசியலமைப்பு, சமூகம் மற்றும் அரசியலின் பன்முக மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, உச்சபட்சமாக இன்னுயிரைத் தியாகம் செய்த ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் வீரர்களுக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
நமது தேசிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திலேயே தனது துடிப்பான மக்களான இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், விஸ்வகர்மாக்கள், தொழில்முனைவோர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொழில், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள், கல்வித்துறை, கலை – கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றில் உள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரின் விடாமுயற்சியுடன் தனது இலக்கை நம்பிக்கையுடன் எய்தி வரும் ஒரு புதிய பாரதத்தின் எழுச்சிக்கு சாட்சியாகவும், தீவிர பங்கேற்பாளர்களாகவும் இருப்பது நமது நற்பேறாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், துடிப்பும் மிக்க தலைமையின் கீழ், நமது சமூக மற்றும் தேசிய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனைகளை பாரதம் இயற்றி வருகிறது. பாரதம் தொடர்ந்து அற்புதமான சாதனைகளுக்கான வரம்பை நிர்ணயித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில், நமது 30 கோடி சகோதர, சகோதரிகள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராதது. பாரதம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாகவும் மாறியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாம் 10-ஆவது பெரிய பொருளாதார தேசமாக இருந்தோம். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாரதத்தை மிகவும் சமமான சமூகங்களில் ஒன்றாக – உலகின் நான்காவது மிகவும் சமமான சமூகமாக அறிவித்துள்ளன. வேகமாக முன்னேறும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பாரதத்தின் மாடலைக் கண்டு உலகம் வியக்கிறது. இது உண்மையிலேயே அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும் என்பதை நோக்கமாகக் கொண்ட மாடல் ஆகும்.
முதல் முறையாக பாரதம் தனது விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி அவர் அங்கு சுமார் இரண்டு வாரங்கள் தங்கி, நமது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு முக்கியமான பரிசோதனைகளை மேற்கொண்டார். வெற்றிகரமான விண்வெளிப் பயணமும், நமது விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லாவின் மகிழ்ச்சியான தாயகம் திரும்பலும் தேசத்தை மகிழ்ச்சியாலும் பெருமையாலும் நிரப்பின.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் மதத்தை அடையாளம் கண்ட பிறகு, அவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதற்கு பதிலடி தரும் விதமாக, பாரதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை உறுதிபட அழித்து, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.
பாகிஸ்தான், அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையில், பாரதத்தின் மீது ராணுவ எதிர்த்தாக்குதல்களை நடத்தியபோது, அதன் அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் விமானங்களை வானிலேயே நமது ராணுவம் அழித்தது மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவத்தை முடக்கிப்போடும் அளவுக்கு கடுமையான அடியையும் கொடுத்தது.
நமது ராணுவம் விமான தளங்கள் உள்பட பாகிஸ்தானின் முக்கியமான சொத்துக்களை அழித்தது. இது பாகிஸ்தானை அவசர போர் நிறுத்தத்துக்கு மன்றாட கட்டாயப்படுத்தியது. குறுகிய, விரைவான மற்றும் துல்லியமான ராணுவ நடவடிக்கையில் பாரதத்தின் இந்த தீர்க்கமான வெற்றி உலக ராணுவ வரலாற்றில் படிக்கப்பட்டு நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்பு வலிமையை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலகுக்கு பறைசாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளப்படாது என்ற தனது கொள்கையை பாரதம் முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் ஒரு போர்ச் செயலுக்கு ஒப்பானதாக கருதப்படும் என்ற புதிய இயல்பை நிர்ணயித்து, எதிர்காலத்தில் இப்படி நடந்தால் எதிரி மீது தக்க முறையில் பாடம் புகட்டப்படும் என்பதை வெளிப்படுத்தியது.
ஆபரேஷன் சிந்தூர், ஒவ்வொரு பாரதியரின் உள்ளத்திலும் பெருமிதத்தை நிரப்பியது. நமது மாபெரும் புலவர் ஐயன் திருவள்ளுவரைப் பின்பற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துக்கும் தயாரான, தரமான ஆயுதம் தாங்கிய மற்றும் உயரிய மாண்புடைய ராணுவத்தின் மதிப்பை நன்கறிந்தவர். இதையே வள்ளுவப் பெருந்தகை,
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுயெல்லாம் தலை.
என்று தனது 761ஆவது குறளில் நமக்குக் கற்பிக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதுமில்லாத மாற்றங்களுக்கு பாரத ராணுவம் உள்பட்டு அதன் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயலுணர்வு மேம்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடற்படை ஆகிய அனைத்து படைகளுக்கும் இடையே முன்னெப்போதுமில்லாத வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச்செயலுணர்வு ஏற்பட்டுள்ளது.
ஆயுதத் தொழிற்சாலைகளை மறுசீரமைத்து மீள்-நோக்கச் செய்ததன் மூலம் அவற்றின் புதுமை மற்றும் உற்பத்தித் திறன்கள் பன்மடங்காகியுள்ளன. இது சிறந்த தரமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்ய வழிவகுத்தது. பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறைக்கு வாய்ப்பளித்ததன் மூலம் பாதுகாப்புத்துறையில் நமது சுயசார்புநிலை கணிசமாக பலம் பெற்றுள்ளது.
மிகப்பெரிய அளவில் ஆயுதம் வாங்கும் நாடு என அடையாளம் காணப்பட்ட நாம் இன்று பல நாடுகளுக்கு ராணுவ தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் துறை பாதுகாப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் சில நமது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே அமைந்துள்ளன. மத்திய அரசு உருவாக்கிய இரண்டு பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. இது நமது மாநிலத்தில் புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமைகிறது. இது நமது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
பொருளாதார வளர்ச்சியில் பாரதத்தின் ஆறு தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக, தமிழ்நாடு பல பத்தாண்டுகளாக விளங்கி வந்திருக்கிறது. இதன் தொழில்துறை அடித்தளம் கணிசமானது – ரயில்பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், டிஜிட்டல் துறை ஆகியன கவனத்தை ஈர்க்கக்கூடியவை.
தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக் கட்டமைப்புகள் மற்ற பல மாநிலங்கள் பொறாமைப்படக்கூடிய வகையில் உள்ளன. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற நமது தேசியப் பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும் பொறுப்புணர்வும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. வளர்ந்த தமிழ்நாடு, வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு முக்கியம். எனவே வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க நமது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
மாநில அரசுக்கு கணிசமான நிதி வழங்கல் உள்பட, மாநிலத்தில் பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள் வாயிலாகவும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வழக்கமான வரிப் பகிர்வைத் தவிர ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை மானியங்களாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கியும், மேம்படுத்தியும் வருவதோடு, சமீபத்திய வருடங்களில் ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.
இவை நமது மாநில உள்கட்டமைப்பு வசதிகளான ரயில்பாதைகள், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களை கணிசமாக பலப்படுத்தியுள்ளது; மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது, நமது தொழிற்துறை மற்றும் வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட உந்துதல் காரணமாக நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.
இவைதவிர, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பல்லாயிரம் கோடி ரூபாய் சென்று சேர்ந்திருக்கிறது.
மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்கு ஊக்கமூட்டும் வகையில், நமது மாநிலத்தில் மத்திய அரசின் நிதியுதவியோடு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழியும், கலாசார மரபும் நமது தேசத்தின் பெருமைகள். அவற்றைப் பராமரித்து மேம்படுத்துவது நமது கடமை. தமிழ்மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபு ஆகியவற்றின் மிகப்பெரிய அபிமானி நமது பிரதமர். அவருடைய சீரிய தலைமையின் கீழ், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாத்து உயர்த்த, மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கிறது.
சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நவீன அலுவலகம் கட்டப்பட்டு, நமது உயரிய திருக்குறள் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும், பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் முதல் முறையாக திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் தமிழாய்வுகளுக்கான ஒரு திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழாய்வுகளுக்கான திருவள்ளுவர் இருக்கை, அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் ஒரு அழகான திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் வருடாந்திர கலாசாரத் திருவிழா, தமிழ் மக்களுக்கும் காசிக்கும் இடையே இருக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் கலாசாரத் தொடர்புக்கு புத்துயிர் அளித்து வருகிறது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர பாரதத்திற்கு அதிகார மாற்றத்தின் சாட்சியாக விளங்கிய பிரமிப்பூட்டும் சோழ செங்கோல், சம்பிரதாய முறைப்படி புதிய நாடாளுமன்றத்துக்குள் நிறுவப்பட்டுள்ளது.
மாபெரும் தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவையொட்டி, மத்திய அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐந்து நாள் கலாசாரத் திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தது. இதில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு, தான் கொண்டுவந்த கங்கை நீரால் சோழர்களின் ஆலயத்தில் புனித வழிபாட்டை மேற்கொண்டதோடு, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அவர்களின் நினைவாக அவர்களுடைய பிரம்மாண்ட உருவச்சிலைகளை அமைக்கும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.
ராமநவமியை முன்னிட்டு, மாபெரும் கவிச்சக்கரவர்த்தி கம்பரைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த ஊரான தேரெழுந்தூரில் சிறப்பான 10 நாள்கள் கலாசாரத் திருவிழாவுக்கு இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. கம்பர் சமாதி உள்ள நாட்டரசன்கோட்டையில் அவரது சமாதி நாளில் மிகப்பெரிய அளவில் கலாசார நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
விவசாயம், மீன்பிடித்தொழில், பால் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருக்கும் நமது சகோதர, சகோதரிகள் தான் நமது தேசத்தின் அடித்தளங்கள். நமது தேசவளர்ச்சியில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். நமது மாபெரும் புலவர் ஐயன் திருவள்ளுவர் கூட,
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
என்று தனது 1032ஆவது குறளில் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற அனைவருக்கும் ஆதரவளிப்பதன் காரணத்தால், விவசாயிகள் சமுதாயத்தின் அச்சாணிகள் என்பது இக்குறளின் பொருள்.
நமது தேசத்தின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திலே அவர்களுடைய மிக முக்கிய பங்கையும் இடத்தையும் கருதி அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். நமது விவசாயச் சந்தைகளை விலைமலிவான அயல்நாட்டு இறக்குமதிகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று மிகப்பெரிய பலம் வாய்ந்த அந்நிய சக்திகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அப்படித் திறந்துவிட்டால் நமது விவசாயிகள், மீனவர்கள், பால்பொருள்கள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரின் நலன்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படி நடக்க விடமாட்டேன் என்று பிரதமர் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், பால் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சார்பாக, அவர்களின் நலன்களைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர்களுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை, பிரதமர் மோடிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் மிகச்சிறந்த மனிதவளங்களில் சிறப்பானது நம்முடையது. நமது இளைஞர்கள் ஆர்வமும், தொழில்முனைவுத்திறனும் மிக்கவர்கள். நமது உள்கட்டமைப்பு கணிசமான பலத்தைக் கொண்டது. விரைவான, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளப்பரிய திறன்கள் நம்மிடம் நிறைந்திருப்பதால் பாரதவளர்ச்சி எஞ்சினாக இருக்க நம்மால் முடியும். அனுகூலமான முன்னேற்றதை விட குறைவான முன்னேற்றத்திற்கு சில சந்தர்ப்பங்களில் நாம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நமது இளைஞர்களின் திறமைகளைக் கட்டவிழ்த்து, அவர்களின் அனுகூலமான திறமைகளுக்கு வாய்ப்பு கொடுக்க, மக்கள் எதிர்நோக்கும் மிகத் தீவிர சவால்களில் சிலவற்றை முழுமனதோடு நாம் எதிர்கொள்ள வேண்டும். அவற்றில் நான்கை நான் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.
i. ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு.
ii. அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு
iii. இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள்