தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் சேரும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் மேலும் சில கட்சிகள் இணையும். இன்னும் சில மாதங்களில் கூட்டணி முழுமையான வடிவம் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.கே.வாசன் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிக்கான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், ஆட்சிமாற்றத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து இயங்கலாம்.
சென்னையில் 13 நாட்களாக போராடிய தூய்மைப் பணியாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தென் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஆட்சி, அதிகாரம், பண பலத்தை நம்பி தேர்தலில் வெற்றிபெறலாம் என்று திமுக எண்ணுகிறது. ஆனால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.
பிஹாரில் பெரும் தோல்வி அடையும் அச்சத்தில், தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் கட்சி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்; சில மாதங்களில் இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும்,” என்று ஜி.கே.வாசன் கூறினார்.