போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – சென்னை ரிப்பன் மாளிகை அருகே நள்ளிரவில் நடந்தது என்ன?
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-ஆம் மண்டலங்களில் தூய்மை பணிக்கான ரூ.276 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதை எதிர்த்து, மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூய்மை பணியாளர்கள், 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், “போராட்டம் என்ற பெயரில் சாலை மற்றும் நடைபாதையை மறித்துக் கொள்ள முடியாது” என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன் போராட்டம் செய்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதேசமயம், உரிய முறையில் அனுமதி கேட்டால், சட்டப்படி பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம் தொடர்ந்தனர்
உத்தரவு வந்தபோதும், தூய்மைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா. கார்த்திகேயன், ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர் பிரதிநிதிகளுடன் ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.
மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஊதிய பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடக்கிறது. இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடக்கக்கூடாது. ஆகஸ்ட் 31க்குள் பணியில் திரும்ப வேண்டும். மாநகராட்சியில் பணிப் பாதுகாப்பு தொடரும்” என்றார்.
உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி, “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து போக மாட்டோம். கைது செய்தாலும் பரவாயில்லை. சமூக நீதி மற்றும் அருந்ததியர், ஆதிதிராவிடர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். அரசு எங்களை ஒடுக்க முடியாது” என்றார்.
நள்ளிரவு கைது நடவடிக்கை
புதன்கிழமை மாலை காவல்துறையினர், ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்துவோரிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். இரவு 11.30 மணியளவில், 15 அரசுப் பேருந்துகளில் 600-க்கும் மேற்பட்டோர் ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டனர்.
சில பேருந்துகளில் இருந்த பணியாளர்கள் பாதியில் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேளச்சேரியில் இறங்கிய சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்; பின்னர் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர். கைது நடவடிக்கையின்போது ஒரு பெண் மயக்கம் அடைந்ததால், அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கூடாரங்கள் அகற்றம் மற்றும் போலீஸ் கண்காணிப்பு
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின், ரிப்பன் மாளிகை முன் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன. மீண்டும் அங்கு போராட்டம் நடைபெறாதவாறு, போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சியின் பிற மண்டலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்தனர்.
தூய்மைத் தொழிலாளர்களை நள்ளிரவில் கைது செய்து வலுக்கட்டாயமாக அகற்றிய சம்பவம் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.