விளையாட்டு வீரர்களுக்கு ₹23.40 லட்சம் நிதியுதவி — துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும், பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்கும் ₹23.40 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ். ரவிபிரகாஷுக்கு, தடகள உபகரணம் வாங்குவதற்காக ₹1 லட்சம் நிதியுதவியை உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் வழங்கினார்.
அதே நேரத்தில், 39வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜே. கோகுல் பாண்டியனுக்கு ₹70 ஆயிரம், மாநில மற்றும் தேசிய அளவிலான பாரா தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற லோகேஷுக்கு உயர்தர பாரா தடகள உபகரணம் வாங்குவதற்காக ₹7.20 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர். தீபிகா ராணி ராமநாதன், வெள்ளிப் பதக்கம் பெற்ற டி. சரவணகுமார், கேலோ இந்தியா பாரா விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற ஜி. அவிநாஷ் ஆகியோருக்கு தலா ₹1.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ₹13.40 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டன.
பின்னர், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 போட்டியை நடத்த, மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் அமைப்புக்கு ₹10 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.