“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம்” – எடப்பாடி பழனிசாமி

0

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம்” – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, “மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அவரை வரவேற்றார். பின்னர், திருப்பத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் மாவட்டத்தைச் சேர்ந்த 32 அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசுகையில், “இந்த 32 அமைப்புகளின் கோரிக்கைகள், அதிமுக ஆட்சியில் விரைவில் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் 200 தடுப்பணைகள் அமைப்பதாக வாக்குறுதி அளித்தது, ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை திட்டம், குடிமராமத்து திட்டம், அம்மா மினி கிளினிக் போன்றவை திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டன. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு இருந்தது; தற்போதைய திமுக ஆட்சியில் பாதுகாப்பு குறைந்து, ஆசிட் வீச்சு மற்றும் நகைக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை; குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லை என்பதால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. உதவி காவல் ஆய்வாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே பாலம், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும். மீண்டும் நாங்கள் ஆட்சி அமைத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம், “திருப்பத்தூரில் எழுச்சி பேரணி நடத்த உள்ளேன். 32 அமைப்புகள் மனு அளித்துள்ளன; அவை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

உட்கட்சி விவகாரங்களை வெளியில் பேசமுடியாது. ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் கட்சியை மாற்றலாம். ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் அரசு பள்ளிகள் மூடப்படுவது தான் சாதனை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல, இப்போது தினமும் கொலைச் செய்திகள் வெளியாகின்றன. ரவுடிகள் அதிகரித்துள்ளனர். போதைப்பொருள் பரவல் காரணமாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

திமுக அரசு அறிவித்த 50 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அறிவிப்பு மட்டுமின்றி, அதை நடைமுறைப்படுத்தினால் தான் வெற்றி பெறும். பாஜக கூட்டணி குறித்து, சூழ்நிலைக்கேற்ப பின்னர் முடிவு எடுப்போம்; கூட்டணி அமைப்பதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மேலும் கட்சிகள் எங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது.

திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த ரஜினிகாந்துக்கு இன்று காலை எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன்” என்றார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்.பி. தம்பிதுரை, வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.