ஆர்டிஐ பதில்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்: மாநில தகவல் ஆணையர் அறிவுரை
நீலகிரி மாவட்டத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம், ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்த இந்நிகழ்வில், மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி, நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் உரையாற்றுகையில், “ஆர்டிஐ சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. முன்பு குறைந்த அளவு மனுக்கள் மட்டுமே வந்தன. இப்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிகமான மனுக்கள் வரத் தொடங்கியுள்ளன.
மனுதாரர்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மனுவை கவனமாகப் படித்து, 30 நாட்களுக்குள் சரியான மற்றும் வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும்,” என அறிவுறுத்தினார்.