சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், புதன்கிழமை இரவில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படுத்தியுள்ளது. இதற்கெதிராக, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்யூஎல்எம் பிரிவினரான இரண்டு மண்டல தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர்ச்சியான போராட்டம் நடத்தி வந்தனர். அரசு தரப்புடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக நடைபெறும் நடைபாதை மற்றும் சாலை மறித்த போராட்டங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அதன்படி, காவல் துறை, போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த புதன்கிழமை மாலை நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், புதன்கிழமை இரவு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட பணியாளர்கள் அரசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். போராட்ட களத்தில் இருந்து விலக மறுத்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அழைத்துச் சென்றனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.