“திமுக கூட்டணியை நம்பியுள்ளது… அதிமுக மக்களை நம்புகிறது!” – எடப்பாடி பழனிசாமி உரை
“திமுக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். திமுக கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் அதிமுக மக்களின் ஆதரவையே நம்புகிறது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம்’ என்ற இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மாலை குற்றாலத்திலிருந்து புறப்பட்டு தென்காசியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“இந்தப் பகுதி வேளாண்மையில் சிறப்பம்சம் வாய்ந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தினோம். இரு முறை பயிர் கடனை ரத்து செய்தோம். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை சுத்தம் செய்தோம். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கினோம்.
விவசாயிகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நிவாரணம் அளித்தது அதிமுக அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், மாடுகள், ஆடுகள், கோழிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு துணை நின்றோம். திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் விவசாயிகளுக்காக கொண்டு வந்ததில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மட்டும் நிறுத்தி விட்டது. திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து, தமிழ்நாடு இந்த் வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை – இவை இல்லாத நாளே இல்லை. சட்ட ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா?
சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தியது அதிமுக அரசு. அதிமுகவின் பத்து ஆண்டு ஆட்சி பொற்கால ஆட்சியாக மக்கள் புகழ்ந்துள்ளனர். கல்வியில் மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தினோம். பல அரசு கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை தொடங்கினோம். 2019-20ல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் சதவீதம் 54 ஆக உயர்ந்தது. ஒரு நல்ல அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அதிமுக நிரூபித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டனர். 10 ஆண்டுகளில் 52.35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தத் திட்டம் தொடரும்.
அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவக்கியது அதிமுக. அதையும் திமுக மூடியது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். தற்போது திமுக அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கியுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் 254 ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்கப்பட்டன. மேலும் 168 மையங்கள் மேம்படுத்தப்பட்டன. திமுக 4 ஆண்டுகள் கழித்து மக்கள் குறைகளை கேட்க முனைவது ஏன்?
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 46 பிரச்சினைகளை கேட்டு தீர்வு தருவதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு இன்னும் 7 மாதமே மீதமிருக்கிறது. இதை அந்த நேரத்தில் முடிக்க முடியுமா? ஏன் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை அலட்சியம் செய்தார்கள்? தங்கள் குடும்ப நலனையே ஸ்டாலின் முக்கியமாக நினைக்கிறார். ஆட்சி தொடங்கும் முன் மனுக்களை பெட்டிகளில் எடுத்து விட்டார்கள். தற்போது மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படிப் போகும் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியில் வர வேண்டுமா?
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் வரியை 100% உயர்த்திவிட்டனர். வரிக்கு மீண்டும் வரி வைத்து மக்களை சிரமப்படுத்தும் இந்த ஆட்சி தொடர வேண்டுமா? கொரோனா காலத்தில் மக்களை பாதுகாத்தது அதிமுக அரசு. ரேஷன் கடைகளில் முழு வருடமும் இலவசமாக பொருட்கள் வழங்கினோம்.
திமுக வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அதிமுக மக்களின் நம்பிக்கையை நம்புகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் சட்டக் கல்லூரி, புளியங்குடியில் குளிர் பதனக் கிடங்கு, மாம்பழச்சாறு உற்பத்தி மையம், வனக் கல்லூரி போன்றவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை மறந்த அரசு தொடர வேண்டுமா?
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டு மனை உடைய ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கப்படும். தீபாவளிக்குப் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
தென்காசியை மையமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் 119 கோடியில் கட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் இன்னும் திறக்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அலுவலகம் திறக்கப்படும். தென்காசி–திருநெல்வேலி நான்கு வழிச் சாலை திட்டத்தை அமல்படுத்தியது அதிமுக. ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதி குடியிருப்புகள், அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், பாலங்கள் என பல்வேறு பணி நிறைவேற்றப்பட்டது.
இரட்டைக் குளம்–ஊத்துமலை வரை கால்வாய் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்தது. அதனை மீண்டும் செயல்படுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும். தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் சுற்றுச்சாலை பணியை விரைவில் நிறைவு செய்யப்படும். குற்றாலம் சுற்றுலா தலத்திற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகனதாஸ் பாண்டியன், தளவாய்சுந்தரம், ஆர்.பி. உதயகுமார், காமராஜ், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.