காவல்துறையில் தேர்ச்சி பெற்றும் பணிக்கு காத்திருப்பு: புதிய எஸ்.ஐ.க்கள் வேதனைப் புலம்பல்
தமிழக காவல்துறையில் தேர்வில் வெற்றி பெற்றும், இரண்டாண்டுகளாக பணிநியமன ஆணையை எதிர்பார்த்து தவிப்பதாக புதிய துணை ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.க்கள்) வேதனை தெரிவித்துள்ளனர்.
2023 மே மாதத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் புதிய எஸ்.ஐ. பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி எழுத்துத் தேர்வு 2023 செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்றது. தேர்வானவர்கள் உடல் தகுதித் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டு, அதுவும் 2023 நவம்பரில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2024 ஜனவரியில் நேர்காணலும் சான்றிதழ் சரிபார்த்தலும் நடைபெற்றது. இறுதியாக ஜனவரி 30-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பின்னர் பிப்ரவரி மாதத்தில் மருத்துவப் பரிசோதனையும் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 750-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்த ஒருவர், இனச் சுழற்சி விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மதிப்பெண் அடிப்படையில் உடல் தகுதித் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக, சுமார் 300 பேர் புதியதாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்ச்சி பெற்ற 41 பேர் தகுதியிழப்பதாக கூறி வெளியேற்றப்பட்டனர். தங்களை தவறுதலாக நீக்கியதாக கூறும் இவர்கள் மீண்டும் தேர்ச்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த விவகாரம் தொடர்ந்து நீள, நீதிமன்றம் விசாரணைக்காக தனிநபர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2025 ஜூலைக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டாலும், இதுவரை பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும், இதனால் 750-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
பாதிக்கப்படுவோரின் கூற்றுப்படி:
“இந்த தேர்வில் காவல்துறையில் ஏற்கனவே பணியாற்றும் 25% உள்பட பலர் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். இருப்பினும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இரண்டாண்டுகளாக நியமன ஆணைக்கு காத்திருக்கிறோம். வேலை கிடைக்காததால் சிலர் திருமணத்தை கூட மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் இப்பணி நியமனத்துக்காக காத்திருக்கிறார்கள்.”
தனிநபர் ஆணையம் தனது அறிக்கையை வழங்கிவிட்ட நிலையில், தமிழக அரசு மற்றும் காவல்துறை தாமதம் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.