ஆடிப் பெருக்கை முன்னிட்டு 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 2 (சனி) மற்றும் ஆகஸ்ட் 3 (ஞாயிறு – ஆடிப் பெருக்கு) ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதனால், சென்னை மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் 690 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 110 பேருந்துகள், மாதவரம் மையம் மூலம் 40 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு திசைகளில் பயணிக்க 250 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிக்க, 15,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி திரும்ப வசதியாக அனைத்து பகுதிகளிலும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை மேற்பார்வையிட அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் தேவையான அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *