தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில், திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு, இந்துக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்துக்களின் உரிமைகள், நலன்கள் காக்க உருவான இந்து முன்னணி, சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அமைந்த அபிராமி அம்மன் கோயிலில் தற்போது விக்ரகங்கள் இல்லாத நிலையில், அங்கு விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்படும். மேலும், அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாட்டையும் திண்டுக்கல்லில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணம் போதைப்பொருள் கலாச்சாரம் ஆகும். எனவே, போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,” என்றார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.