தமிழகத்தில் பாதிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு கருணைக் கொலை அனுமதி – அரசு அறிவிப்பு
தெரு நாய்களின் எண்ணிக்கையும், அவற்றால் ஏற்படும் சிக்கல்களும் அதிகரித்து வரும் நிலையில், நோயால் அவதிப்படும் நாய்களை கருணை முறையில் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
“நோயால் பாதிக்கப்பட்டு, துயரம் அனுபவிக்கும் தெரு நாய்களை கருணை அடிப்படையில் கொலை செய்யலாம். இந்த செயல், பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய கருணைக் கொலை நடவடிக்கைகள் குறித்த முழுமையான பதிவுகளும் பத்திரமாக வைக்கப்பட வேண்டும். மேலும், உயிரிழந்த நாய்கள் முறையான முறையில் புதைக்கப்பட வேண்டும்,”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடக்க கூட தயங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தெரு நாய்களின் கடியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில், தெரு நாய்கள் ஏற்படுத்தும் பயத்தால் சாலை விபத்துகள் கூட நிகழ்ந்திருக்கின்றன.
தெரு நாய்களால் கடிக்கப்பட்டு, கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடித்தால், அது மனிதர்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த தொற்று உயிரிழப்புக்கும் வழிவகுக்கிறது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணை அடிப்படையில் கொல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன், அண்டை மாநிலமான கேரள அரசும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டும் அதே வழியில் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.