தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

0

தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சென்னை நகரைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்த விவரங்கள் பின்வருமாறு:

தஞ்சாவூரில் இயங்கும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 60 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகளும், 4,503 அரிய நூல்களும் உள்ளன. நூலகத்தில் மொத்தம் 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன.

மத்திய அரசு பழமையான மற்றும் முக்கிய நூலகங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நிதி ஒதுக்கி வருகிறது. அந்தவகையில், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தையும் “தேசிய நூலக திட்டத்தின்” கீழ் மாதிரி நூலகமாக அறிவித்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வில், “தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஒரு முக்கிய பாரம்பரியமும், வரலாற்று முக்கியத்துவமும் கொண்ட இடம். எனவே, அதற்கேற்ப உரிய கவனம் அரசுகள் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.