சென்னை விமான நிலையத்தில் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் நடைப்பெற்று வரும் இரண்டாம் கட்ட கட்டுமானத் திட்டங்களை தொடர்பாக, டெல்லியில் இருந்து வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான வருகை-புறப்போக்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் 2.2 கோடியாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டில் 3.5 கோடியை நெருங்கியுள்ளது.
இந்த வளர்ச்சியை மனதில் கொண்டு, ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது. இது இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
- முதல் கட்டம்: ரூ.1,260 கோடியில், 1.49 லட்சம் சதுர மீட்டரில் கட்டுமானம்.
- இரண்டாம் கட்டம்: ரூ.1,207 கோடியில், 86,135 சதுர மீட்டரில் கட்டுமானம்.
முதல் கட்ட வேலைகள் ஏற்கனவே 2023 ஏப்ரலில் முடிக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். தற்போது, இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2025 இறுதிக்குள் முடிவடைந்து, 2026 மார்ச் மாதம் முழுமையான சேவைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் தலைமையிலான குழு, விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு, விரைவாக முடிக்க வேண்டும் என்றும், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் புதிய முனையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பணிகளை மேற்பார்வையாளர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.