ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்த உயர் நீதிமன்றம்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தீர்ப்பாயம் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதை, உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாகக் குறிப்பிடும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை டாஸ்மாக் தலைமையகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் அடிப்படையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, லேப்டாப் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விக்ரம் ரவீந்திரனின் சொத்துகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 20ம் தேதி இடைக்கால தடை உத்தரவு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை தீர்ப்பாயம் கடந்த ஜூலை 11ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “நீதிமன்றத் தடை இருந்தும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தடை தேவை” என்றார்.
அமலாக்கத் துறையின் தரப்பில் வாதம் நடத்திய சிறப்பு அரசு வக்கீல் என். ரமேஷ், “இந்நோட்டீஸ், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெறும் முன், பறிமுதல் ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து விளக்கம் பெறும் வகையில் அனுப்பப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அமலாக்கத் துறை தொடர்ந்து இப்படி தான் செய்கிறதால்தான் இடைக்காலத் தடையை விதித்தோம். மேல்முறையீடு செய்யவேண்டும் என்றால் சட்டப்படி செய்யலாம், ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறுவது தப்பான செயல். இது கண்டிக்கத்தக்கது” எனக் கடும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், மனுதாரர் விருப்பப்பட்டால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும், இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதிக்கு முக்கிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதற்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு வழங்கி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.