முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.37 கோடி பரிசுத்தொகை – ஆகஸ்ட் 16 வரை பதிவு செய்யலாம்
மொத்தமாக ரூ.37 கோடி பரிசுத்தொகையுடன் நடைபெறவுள்ள முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவு, வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிவரை தொடரும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட, மண்டல மற்றும் மாநில மட்ட மையப்பட்ட போட்டிகளுக்காக ரூ.83.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் மாவட்ட மற்றும் மண்டல அளவுகளில் ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 12 வரை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் 25 போட்டிகள், மண்டல அளவில் 7 போட்டிகள் மற்றும் மாநில அளவில் 37 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படும்.
தனிநபர் விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் முதல் பரிசாக, இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக மொத்தமாக ரூ.37 கோடி பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் https://cmtrophy.sdat.in/cmtrophy அல்லது https://sdat.tn.gov.in இணையதளங்களில் பதிவு செய்யலாம். முன்பதிவிற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9514000777 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.