ராஜேந்திர சோழனுக்கு விழா நடத்தும் வாய்ப்பு பெருமை அளிக்கிறது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கான விழாவை நடத்துவது பெருமையளிக்கின்றது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 23ஆம் தேதி மாமன்னர் ராஜேந்திர சோழரின் ஆடி திருவாதிரை திருநாளை தமிழக அரசு மிகவும் விமர்சையாக கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு, அங்குள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பந்தல் அமைக்கும் பணிகளை இன்று (ஜூலை 21) அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது: “ராஜேந்திர சோழரின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி காலை மங்கள இசையுடன் விழா தொடங்கும். இந்த விழாவில் நிதி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலா துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மற்றும் நானும் பங்கேற்று உரையாற்ற இருக்கிறோம்,” என்றார்.
மேலும், கலை பண்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனுடன், முனைவர் பர்வீன் சுல்தானாவின் தலைமையில், “சோழர்களின் புகழுக்குக் காரணம் நிர்வாகத் திறன் மற்றும் போர்களில் வெற்றி” எனும் தலைப்பில் பட்டிமன்றமும் நடத்தப்படும். மாலை நேரத்தில், வரலாற்று நாடகம், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமியப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
காடுகளை அகற்றி நகரங்கள், கிராமங்கள் தோன்றும் வகையில் அமைப்பாற்றலுடன், பொன்னேரி வெட்டியும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலையும் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழருக்கு இவ்விழா நடத்தப்படும் என்பது எங்களுக்குப் பெருமையாகும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: “இரவு நேரங்களில், சில தொலைதூர அரசுப் பேருந்துகளின் முன் பெயர் பலகைகள் எரியாமல் செல்லும் விவகாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பெயர் பலகைகளும் ஒளியுடன் செயல்பட வேண்டும் என மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை, ‘ஆட்சியில் பங்கு தர எங்களை ஏமாளிகள் என நினைக்க வேண்டாம்’ என்று கூறுவது, அவர்களுக்குள் ஏற்பட்ட பங்கீட்டு குழப்பத்தைக் காட்டுகிறது. அதனால்தான் இந்த நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். நாடகம் உச்சத்தை எட்டும் தருணத்தில் உண்மையான முடிவுகள் தெரியவரும்,” என்றார்.