நவம்பர் மாதத்துக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான முகாம்கள் நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் தகவல்
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்க உள்ளன என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், மருத்துவர்கள் சான்றுடன் அடையாள அட்டைகளை வழங்கும் முகாம்கள் கடந்த 2024 ஆகஸ்டு மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், தமிழக முதல்வர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், ஊரக மற்றும் நகர பகுதிகளிலுள்ள மக்களிடம் நேரடியாக அரசு சேவைகள் வழங்கும் நோக்கில் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், சென்னையில் மட்டும் 400க்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக முகாம் நடைபெறும்: இந்த முகாம்கள் மண்டல வாரியாக நடை பெறுவதால், தற்போது நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்கள் மற்றும் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம்கள், நவம்பர் மாதத்தை தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மீண்டும் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.