நத்தம் அருகே கிராம மக்கள் கொண்டாடிய மீன்பிடி திருவிழா!

நத்தம் அருகே கிராம மக்கள் கொண்டாடிய மீன்பிடி திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கோசுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தலக்கம்பட்டி கிராமத்தில் இன்று (ஜூலை 20) நடைபெற்ற மீன்பிடி திருவிழா கிராம மக்களின் உற்சாகப் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இங்கு உள்ள சத்திரகண்மாய் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டுதோறும் இதில் நீர் குறையும்போது, மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டும் கண்மாயில் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்து, ஊர் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, மீன்பிடித் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக சுற்றுப்புற கிராமங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கரையூர், சக்கபிச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

வலைகள், கச்சா, கூடை வலைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கண்மாயில் இறங்கிய அனைவரும் மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் ஜிலேபி, கெண்டை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் பிடிபட்டன. அந்தக்களத்தில் அதிக எடையுள்ள ஒரு மீன் மட்டும் 10 கிலோ எடையுடன் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் பிடித்தவர்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று சமைத்து உண்பதோடு, உறவினர்களுக்கும் பகிர்ந்தளித்தனர். இன்று கருத்தலக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீன்குழம்பு வாசனை வீசியது.

இந்த திருவிழா கிராம மக்கள் ஒருமித்தமாக கலந்து கொண்ட இனந்தெரியாத மகிழ்வை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன