மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரியே!” – அண்ணாமலை

0

“மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரியே!” – அண்ணாமலை வாக்குமூலம்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போல. உரிக்க உரிக்க போனால் எதுவும் இருக்காது; அந்த பதவிக்கு பின்னால் ஓடும் தன்மை எனக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். அதே நேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய “நாங்கள் ஏமாளிகள் அல்ல, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக அல்ல” என்ற வாக்கியத்தைப் பற்றியும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:

“பாஜக கட்சி என்றால், யாரையும் ஏமாற்றுவதும் இல்லை, ஏமாறுவதும் இல்லை. யாரையும் தாழ்வாக நினைத்து மேலே வரவேண்டும் எனும் நோக்கமும் இல்லை. இந்தக் கருத்தை ஏற்கனவே மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே அதைப்பற்றி நான் மேலும் பேச வேண்டிய அவசியமில்லை.”

மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தன்னுடைய பங்கு இல்லை என்றும், “நான் என் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கிறேன். நான் ஒரு பாஜக தொண்டன். திமுக ஆட்சியை அகற்றுவதே ஒரே குறிக்கோளாக தமிழகம் முழுவதும் பயணிக்கிறேன். இன்று நடைமுறையில் உள்ள அரசியல் முறையே மாறிவிட்டது. இதை அனைத்து தலைவர்களும் உணர வேண்டும்” என்றார்.

தனிச்சேர்க்கையா? கூட்டணியா? என்ற கேள்விக்குப் பதிலாக:

“தனிப்பட்ட கட்சியாக ஆட்சி அமைக்க முடியும் என்று எனக்கு உறுதி இல்லை. அதுபோல திமுகவுக்கும் தனித்து ஆட்சி அமைக்க இயலுமா என்பது சந்தேகமே. இன்றைய தமிழகத்தின் சூழ்நிலை மாறியுள்ளது. இது 1980s, 1990s காலம் அல்ல. தற்போது கூட்டணி மற்றும் தொண்டர்களின் உழைப்பே முக்கியம்.

2024 மக்களவைத் தேர்தல் இதற்குச் சான்று. எந்தக் கட்சிக்கு என்ன வாக்கு சதவீதம் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நான் யாரையும் குறைத்து மதிப்பதில்லை; அதேபோல், மற்ற கட்சிகளும் ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிடக் கூடாது” என அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு, பதவிக்காக அல்லாமல் குறிக்கோளுக்காகத்தான் அரசியலில் இருப்பதாகவும், புதிய அரசியல் நிலையை தலைவர்கள் உணரவேண்டும் என்பதையும், அண்ணாமலை தெரிவித்துள்ளார்.