கல்வெட்டுகள் குறித்து விரைவில் தேசிய அளவிலான கருத்தரங்குகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

0

கல்வெட்டுகள் குறித்து விரைவில் தேசிய அளவிலான கருத்தரங்குகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மதுரையில் நடந்த தொல்லியல் கழகம் மற்றும் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாட்டின் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிகழ்வில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டுக்கருத்தரங்கம், 35-வது “ஆவணம்” இதழ், கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பவளவிழா மலர் மற்றும் “திசையாயிரம்” நூல் வெளியிடப்பட்டன.

நூல் வெளியிட்டு உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

“ஒருகாலத்தில், பட்ஜெட்டில் ஓர் இடத்தில் நிதி குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முதலில் அதற்குள்ளாகும் துறைதான் தொல்லியல் துறை என்பது போல் நிலை இருந்தது. ஆனால் இப்போது நான் நிதி அமைச்சராகவும், தொல்லியல் அமைச்சராகவும் இருப்பதால், நேரத்தை குறைக்க முடிந்தாலும், நிதி ஒதுக்கீட்டில் ஒரு ரூபாய்கூட குறைக்க விருப்பமில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத் துறையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்குக் காரணமாக உள்ளது அரசு மேற்கொண்ட அகழாய்வுகள் மட்டும் அல்ல; இளம் தலைமுறையில் உருவாகியுள்ள ஆர்வம், புதுமையான தகவல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.

முன்பு ஓராண்டுக்கு ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7 கோடி வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. அகழாய்வுகள் மட்டுமல்லாமல் கல்வெட்டுகளுக்கும், நாணயங்கள் உள்ளிட்ட பிற தொல்லியல் துறைகளுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வெளிக்கொண்டு வர விரைவில் ரூ.30 கோடி செலவில் தேசிய அளவிலான கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் மாணவர்கள் பானை ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து ஆய்வு செய்வது மிகவும் நல்வரவு. இவை அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்தும் பணியை அரசு முன்னெடுத்து வருகிறது.

மேலும், உலக தமிழ் சங்கத்தில் கல்வெட்டுகள் குறித்த சிறப்பு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்துமுறைகள் மற்றும் மொழித் தொடர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை விளக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படும். அகழாய்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை, அதனுடன் தொடர்புடைய பிற தொல்லியல் துறைகளுக்கும் விரிவாக வழங்க வேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கும் அரசு மதிப்பளிக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.