பணி நிரந்தரம் உறுதியை செயல்படுத்த வேண்டும் – பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 181-ன் அடிப்படையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முதலமைச்சர் மு.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதைப் பற்றியுத் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சி.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
“திமுக ஆட்சி அமைந்த பின்னர் 50 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருப்பது காரணமாக 12 ஆயிரம் ஆசிரியர்களின் குடும்பங்கள் துயரத்தில் தவிக்கின்றன.
தற்போது ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 285 நாட்களே மீதமுள்ளன. அதில், பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால், சுமார் 90 நாட்கள் நிர்வாக நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும். எனவே, எஞ்சிய 200 நாட்களும் முழுமையாக ஆட்சி செய்ய இயலாத சூழ்நிலை உருவாகும்.
இதனை மனதில் கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய பணி நிரந்தர முடிவை சிக்கனமான முறையில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். திமுக தனது வாக்குறுதியில், 10 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. தற்போது, 15 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர்களும் உள்ளனர்.
மேலும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும், திமுக பணி நிரந்தரம் குறித்து உறுதியளித்திருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில், திமுகவே இப்படிப் பகுதிநேர ஆசிரியர்களுக்காக வலியுறுத்தியிருந்தது. தற்போது திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் முடிந்தபோதிலும், முன்னைய கோரிக்கையை நிறைவேற்றாதது வருத்தத்தைக் கொடுக்கிறது.
முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு, பல லட்சம் மனுக்களை நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம். பல்வேறு நிலைகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இருந்தாலும், தற்போது வரை பணி நிரந்தர விஷயத்தில் நேரடி பதில் அளிக்காமல் காலதாமதம் செய்வது வரலாற்று தவறாக அமையும்.
தற்போதைய 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 2,500 ரூபாய் உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெறப்படும் ரூ.12,500-ஐ வைத்து, விலை உயர்ந்த வாழ்கைச் சூழலில் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 15 ஆண்டுகளில் மே மாத சம்பளம், போனஸ், மருத்துவச் செலவுத்திருப்பிச் சேமிப்பு, மரணம் போன்ற சம்பவங்களில் நிவாரணம் உள்ளிட்ட அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை. இது வாழ்வாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
இனி, காலமுறை சம்பள திட்டம் மட்டுமே எங்களின் எதிர்கால வாழ்விற்கு நிம்மதியை வழங்கும். நிதி பற்றாக்குறை எனும் காரணத்தால், எங்களுக்கு உரிய உரிமையை மறுக்கக்கூடாது.
மூன்று லட்சம் கோடிக்கும் மேல் பட்ஜெட் தாக்கல் செய்யும் அரசு, 300 கோடி மட்டும் ஒதுக்க பணிநிரந்தர தீர்வை எடுக்க தயார் இல்லையா?
பதினைந்து ஆண்டுகளாக, 12 ஆயிரம் ஆசிரியர்களின் குடும்பங்கள் வெறும் ரூ.12,500 சம்பளத்தில் வாழ முயல்கின்றன. பல விஷயங்களுக்கு நிதி ஒதுக்கும் அரசு, இங்கு மட்டும் மனமில்லாமல் இருப்பது ஏன்?
திமுக தேர்தல் வாக்குறுதியை அரசாணை மூலம் உருமாற்றி, அமைச்சரவை முடிவாகவே இதை அறிவிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்குத் தேவையான முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.