2030 காமன்வெல்த் போட்டிக்கு ஐஓஏ அனுமதி – AthibAn Tv

0

2030 காமன்வெல்த் போட்டிக்கு ஐஓஏ அனுமதி

2030-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030 காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதோடு, அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமைக்கான ஏலத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஆகஸ்ட் 31. ஐஓஏ அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த போட்டியை நடத்தும் அனைத்து செலவுகளும் மத்திய அரசு மூலம் அனுப்பப்படும்.

காமன்வெல்த் விளையாட்டு இயக்குநர் டேரன் ஹால் சமீபத்தில் அகமதாபாத்தில் குஜராத் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தினார். இந்த மாத இறுதியில் பெரிய குழு அகமதாபாத் நகரில் ஆய்வு செய்யும் திட்டம் உள்ளது.

2030 காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமைக்கு கனடா விலகியதால், இந்தியாவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடைசியாக, இந்தியா 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.

வரும் நவம்பர் கடைசி வாரத்தில் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் பொதுக்கூட்டத்தில் 2030-ம் ஆண்டு போட்டியை நடத்தும் நாடு முடிவு செய்யப்படும்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் அடுத்த போட்டி நடைபெறும்.