34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரலாறு படைத்தது! – AthibAn Tv

0

34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரலாறு படைத்தது!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி (3வது) ஒருநாள் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனை படைத்தது.

டிரினிடாடில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஷாய் ஹோப், 94 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உடன் 120 ரன்கள் குவித்து தனது 19வது சதத்தை பதிவு செய்தார்.

இறுதிக் கட்டத்தில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து, ஹோப்புடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு கடைசி 8 ஓவர்களில் 110 ரன்கள் கூட்டணி அமைத்தார். எவின் லீவிஸ் 37, ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் பங்களித்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

295 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, 29.3 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சல்மான் ஆகா 30, முகமது நவாஸ் 23, ஹசன் நவாஸ் 13, பாபர் அசாம் 9, நசீம் ஷா 6 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் (சைம் அயூப், அப்துல்லா ஷபிக், கேப்டன் முகமது ரிஸ்வான், ஹசன் அலி, அப்ரார் அகமது) ரன்கள் எதுவும் பெறாமல் வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் 7.2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை முறியடித்தார்.

இந்த வெற்றியால், மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது; இரண்டாவது ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அதே வித்தியாசத்தில் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை, 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு (34 ஆண்டுகள் கழித்து) வெல்லும் பெருமையை இப்போது தான் மீண்டும் பெற்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.