மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ரேட்டிங்: ஸ்மிருதி மந்தனாவை முந்தி முதலிடம் பிடித்த நாட் ஸ்கைவர்-பிரண்ட்

0

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ரேட்டிங்: ஸ்மிருதி மந்தனாவை முந்தி முதலிடம் பிடித்த நாட் ஸ்கைவர்-பிரண்ட்

ஐசிசி வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்து அணியின் தலைவரான நாட் ஸ்கைவர்-பிரண்ட் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார். இதேபோன்று, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

நாட் ஸ்கைவர்-பிரண்ட் கடந்த முறையாக 2023ஆம் ஆண்டில் முதலிடம் வகித்திருந்தார். அண்மையில் இந்தியாவை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் தொடரில், 32 வயதான அவர் 160 ஓட்டங்கள் எடுத்தார். இதன் பின்னணியில், 731 புள்ளிகளை பெற்று அவர் முதல் இடத்திற்கு எழுந்துள்ளார்.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், முன்பு இருந்த 21-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். நடுவரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடத்திலிருந்து 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில், இந்தியாவின் தீப்தி சர்மா 4-வது இடத்தில் தொடர்ந்துள்ளார். இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடம் வகிக்க, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆஷ் கார்ட்னர் மற்றும் மேகன் ஸ்கட் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.