ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் பக்தர்கள்

0

ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கூடினர். அவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைவு கூர்ந்து தர்ப்பண செய்யும் வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் கோயில்களில் வழிபாடு செய்தும், அன்னதானம் வழங்கியும் பக்திப் பரவசத்தில் கலந்துகொண்டனர்.

இந்துக்களில், முன்னோர்களுக்காக வழிபட வேண்டிய புனித நாளாக அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி மாத அமாவாசை மிகவும் முக்கியமானதாக வணங்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் பெருமளவில் ஆறுகளின் கரை, கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் சன்னிதி செய்து, தர்ப்பணம் செய்வது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைந்து, அவர்கள் தரும் ஆசி குடும்ப நலனுக்கும் சந்ததி விருத்திக்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 23-ஆம் தேதி, வீரபாண்டி பெரியாற்றங்கரைக்கு வந்த பக்தர்கள், ஆற்றில் பரிசுத்த நீராடிய பின், தர்ப்பண வழிபாட்டைச் செய்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை படையலிட்டு, எள் மற்றும் பிந்தங்களை தயார் செய்து ஆற்றில் கரைத்தனர். அதனைத் தொடர்ந்து, யாசகர்களுக்கு உணவளித்து, கால்நடைகளுக்கு கீரைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், அருகிலுள்ள கண்ணீஸ்வரமுடையார் மற்றும் கவுமாரியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து பக்தர்கள் வாகனங்களில் உணவுப் பொருட்களை கொண்டு வந்து பிறருக்கும் தானமாக வழங்கினர். இதுபற்றி புரோகிதர்கள் தெரிவித்ததாவது, “தர்ப்பணமும் திவசமும் இரண்டும் வெவ்வேறு வகையான முன்னோர் வழிபாடுகளாகும். தர்ப்பணம் என்பது முன்னோர்களுக்கு நீர் மற்றும் எள் கொண்டு அருள் பெற்று, அவர்களை திருப்தி செய்யும் வழிபாடாகும். இது பொதுவாக அமாவாசை தினங்களில் செய்யப்படுகிறது.

மாறாக, திவசம் என்பது ஒருவர் இறந்த மாதம், இறந்த திதியைப் பொறுத்து செய்யப்படும் தனிப்பட்ட வழிபாட்டாகும்” என்றனர்.

ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை தினமானதால், வீரபாண்டி மட்டுமின்றி, தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி முருகன் கோயில், போடி காசிவிசுவநாதர் ஆலயம், உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில், ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் ஆகிய இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.