தமிழில் உறுதிமொழி எடுத்தே எனது பயணத்தைத் துவக்கியேன்: கமல்ஹாசன் எம்.பி.
“மாநிலங்களவை உறுப்பினராக நான் மேற்கொள்ளும் பயணம், தமிழில் உறுதிமொழி எடுத்துகொண்டு துவங்கியது” என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர்களாக மாநிலங்களவையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம், அப்துல்லா ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய உறுப்பினர்களாக கமல்ஹாசன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் பி. வில்சன் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
இதையடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், “இந்திய அரசியலமைப்பின் மீது என் முழுமையான விசுவாசத்தையும், உறுதியையும் வலியுறுத்தியவாறு, ‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதியாகக் காக்குவேன்’ என நான் இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்மொழியில் உறுதிமொழி எடுத்தேன். இதனுடன், மாநிலங்களவை உறுப்பினராக என் அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த அருமையான தருணத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தோழர்கள் என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது நெஞ்சத்தோழர் ஸ்டாலின், விரைவில் முழுமையாக நலம் பெறுவார் என்பதையும், வீடு திரும்பவிருக்கிறார் என்பதையும் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்காக மனமார வாழ்த்துகிறேன் – நல்ல உடல்நலம் மற்றும் நிரந்தர வெற்றிகள் தொடர வாழ்த்துகிறேன்” என்றும் தெரிவித்தார்.