முதல்வரைச் சந்தித்ததின் காரணம் என்ன? – சீமான் விளக்கம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மறைவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலவர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதியையும் சீமான் நேரில் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:
“மு.க.முத்துவின் மறைவு எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நேரில் சென்று துயரத்தைப் பகிர முடியவில்லை. அதனால் முதல்வரையும், துணை முதல்வரையும் நேரில் சந்தித்து என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அரசியல், கொள்கை என வேறுபாடுகள் இருந்தாலும் மனித உறவுகள் அவற்றை மீறிச் செல்லும். கொள்கை என்பது ஒன்று. மனித மதிப்பும் மனப்பான்மையும் வேறொரு விஷயம்.”
மேலும், “ஒருமுறை வெயிலில் நீண்ட நேரம் நின்று மயங்கி விழுந்த போது, என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு, எனது நலனை விசாரித்தவர் ஸ்டாலின்தான். என் தந்தை இறந்தபோதும் அவர் ஆறுதல் தெரிவித்ததோடு, அமைச்சர் பெரியகருப்பனை அனுப்பி தேவையான உதவிகளைச் செய்தார். இது அரசியலைத் தாண்டிய மனிதநேயத்தின் வெளிப்பாடு. இந்த பண்பாட்டும் நாகரிகமும் இந்நாட்டில் மீண்டும் விரியும் என்று நம்புகிறேன்” என்றார்.
தவெக தலைவர் விஜய்யுடன் தொடர்பாகக் கேட்டபோது, “தற்போது அவருடன் பேசுவதற்கான அவசியம் ஏற்பட்டதாக இல்லை. அவர் பயணம் வேறு வழியில் சென்றுவிட்டது” என்றார் சீமான்.