மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் சொத்து வரி முறைகேடுகள் தொடர்பாக மேயரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கு மேல் சொத்து வரியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக மண்டலத் தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள், நகரமைப்புக் குழு தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.”
இவ்வழக்கை சுட்டிக்காட்டிய அவர், “தற்போது வரை நடந்தது போல, சாதாரண நிலைமையில் உள்ள பில் கலெக்டர்கள், பகுதி நேர ஊழியர்களை மட்டுமே குற்றவாளிகளாக காட்டி நடவடிக்கை எடுப்பது வெறும் கண் துடைப்பு நாடகமாகவே தெரிகிறது. உண்மையான குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கடந்த ஜூலை 8ஆம் தேதி நாம் அறிவித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜூலை 7ஆம் தேதி ஐந்து மண்டலத் தலைவர்கள், வரி விதிப்புக் குழு தலைவர் மற்றும் நகரமைப்புக் குழு தலைவர் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இது, எங்களது போராட்டத்தின் நேரடி பலனாகும்,” என்றார்.
தொடர்ந்து, “உண்மையான விசாரணை நடைபெறவில்லை என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் எட்டுமாதமாக செயல்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பில் கலெக்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் உண்மையான ஊழலர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது,” என்றார்.
அத்துடன், “தற்போது நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தென் மண்டல ஐஜி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், இந்த முறைகேடுகளில் கணினி பிரிவில் பணியாற்றிய ரவி என்பவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இவர் இரவில் ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைச் சுற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், இவரது மனைவி மேயரின் நெருங்கிய உதவியாளராக இருந்ததைத் தொடர்ந்து, மேயரையும் இந்த விசாரணையில் சேர்த்தே விசாரிக்க வேண்டும். மாநகராட்சியில் மேயரின் அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கையும் நடக்க வாய்ப்பே இல்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.
முடிவில், “மண்டலத் தலைவர்கள் தங்கள் பெயரில் அல்லாது பினாமி பேரில் சொத்துகள் குவித்துள்ளார்களா என்பதைப்பற்றியும் விரிவான ஆய்வு நடைபெற வேண்டும்,” என்றார் செல்லூர் ராஜூ.