அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி” – சி.வி. சண்முகம் உறுதி

0

“அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி” – சி.வி. சண்முகம் உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை திமுக அரசு தொடங்கவில்லை என்பதை கண்டித்து, அதனை எதிர்த்து அதிமுகவினர் இன்று (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், “அதிமுக ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் இயங்கியிருக்குமானால், மாணவர் சேர்க்கை தொடர்பான பிரச்சனைகள் எழுந்திருக்கும் வாய்ப்பு இல்லை. இந்த இடைமறைவு, ஜெயலலிதாவின் பெயர்தான் அவர்களுக்கு தலைவலி என்பதை காட்டுகிறது. அதிமுகவினர், ஜெயலலிதா என்ற பெயரை மாற்றி, அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் கேட்டனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிறுவனத்தை முடக்கியுள்ளனர்.

அரசின் கடமை கல்வியை வளர்ப்பது, அதை லாப நஷ்ட அடிப்படையில் மதிப்பீடு செய்வது அல்ல. கல்வி ஒரு வியாபாரம் அல்ல. திமுக அரசு உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 53 சதவீதம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த உயர்வுக்கு அடித்தளம் போட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிதான். ஒரு சதவீதத்தையும் உயர்த்தாமல் சாதனை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

திமுக ஆட்சி கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்தவொரு புதிய பொறியியல், மருத்துவம், சட்டம் தொடர்பான கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களையும் துவக்கவில்லை. அரசு நிதியில் இருந்து புதிய கல்வி நிறுவனங்களை தொடங்காதே, கோயில் நிதியை பயன்படுத்தி சில கலைக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளனர்.

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், அந்த கோயில்களின் பராமரிப்பு, தூய்மை, மற்றும் பக்தர்களுக்கான சேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் திமுக அரசு அந்த நிதியையும் தனது தேவைகளுக்கு மாற்றி பயன்படுத்துகிறது. விபூதி, குங்குமம், சந்தனம் வைக்க மாட்டோம் என்று கூறும் அரசே, கோயிலின் பணத்தில் கையை வைக்கிறது. இது பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்.

கபாலீஸ்வரர் கோயிலின் நிதியை பயன்படுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் கல்லூரி ஒன்றை துவக்கியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில், இந்தக் கோயில் நிதி ரூ.400 கோடியாக இருந்தது. தற்போது அந்த நிதி முழுமையாக கழிந்துவிட்டது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக ஆட்சியில் 50 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த பட்டியலை வெளியிட அவர் தயாரா? பொய்களை பரப்புவது தவறு. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிய அரசே, பட்ட மேற்படிப்பு மையத்தையும் மூட முயன்றது. இதற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டத்தின் விளைவாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என திருக்கோவிலூர் எம்எல்ஏ பொன்முடி கூறியுள்ளார்.

ஆனால், முதல்வரும், உயர் கல்வித் துறை அமைச்சரும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் இதுபற்றி எந்தவிதமான உறுதியும் அளிக்கவில்லை. விழுப்புரம் தொகுதியில் உள்ள எம்எல்ஏ இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் உள்மையாக இருப்பாரா எனவே சந்தேகம் உள்ளது. திருக்கோவிலூர் எம்எலேவுக்கு இருந்த அக்கறை, விழுப்புரம் எம்எலேவுக்கு ஏன் இல்லை?

திமுக ஆட்சியில், விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் இருந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்ததும், அதனை மீண்டும் திறந்தனர். நகராட்சி பிரசவ மையத்தையும் மூட திட்டமிட்டிருந்த நிலையில், அதிமுகவினர் போராட்டம் நடத்தி அதை தடுக்கச் செய்தனர். திமுக அரசின் நோக்கம் அனைத்தையும் தனியார்மயமாக்குவதே.

மக்களின் எதிர்ப்பால் சில இடங்களில் திமுக அரசு பின்வாங்கியுள்ளது. ஆனால், ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிதி வைத்திருப்பது கேள்விக்குரியது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மீண்டும் செயல்படுத்துவது நிச்சயம்” என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.