சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது இனிமேல் கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு, நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே, செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். சரியான உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் வழங்கி பராமரிக்க வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக்கூடாது என்றும், ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியையே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது அவற்றுக்கு வாய்மூடி கட்டி, கழுத்துப்பட்டையுடன் சங்கிலியில் கட்டியிருக்க வேண்டும்.
மேலும், உரிமம் பெறாத நாய்கள் மற்றும் முகமூடி இன்றி பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவை மீது இந்திய பிராணி நல வாரியத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளின் நடத்தைகள், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை என்பதால், உரிமையாளர்கள் பொறுப்புடன் அவற்றை பராமரித்து, பிறருக்கு இடையூறு ஏற்படாதபடி கவனிக்க வேண்டும். குடியிருப்பு வளாகங்கள், மின்தூக்கிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என எங்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் செல்லப்பிராணிகள் நடக்காதபடி உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி உரிமம் பெறாமல் நாய்களை வளர்த்தாலோ, ஆபத்தான வகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவற்றை பொது இடங்களில் விட்டாலோ, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.