நமது வரலாற்றின் வேதனையான பகுதி – தேசப் பிரிவினை: பிரதமர் மோடி
நாடு பிரிவினையை சந்தித்த காலத்தில், எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்புகளை அனுபவித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14 தேதியை, நாடு பிரிவினை துயர நாள் (Partition Horrors Remembrance Day) எனக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட செய்தியில்,
*”நமது வரலாற்றின் அந்த வேதனையான காலப்பகுதியில், எண்ணற்ற மக்கள் எதிர்கொண்ட திடீர் வன்முறையையும், தாங்க முடியாத துயரத்தையும் நினைவுகூரும் நாளாக இந்தியா #PartitionHorrorsRemembranceDay ஐ அனுசரிக்கிறது.
அந்தச் சூழ்நிலையில் கூட மன உறுதியுடன் புதிதாகத் தொடங்கிய அவர்களின் தன்னம்பிக்கையும், துணிவும் பாராட்டத்தக்கது. பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் அமைத்து, சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். நமது தேசத்தை ஒன்றிணைக்கும் நல்லிணக்கப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது நமது நிரந்தர பொறுப்பு என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது”* என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது செய்தியில்,
*”#PartitionHorrorsRemembranceDay என்பது நாட்டின் பிரிவினை நினைவுகளையும், அதன் துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான அஞ்சலியையும் குறிக்கும் நாள். அந்நாளில், நாட்டை துண்டு துண்டாகப் பிரித்து, வன்முறை, சுரண்டல், அட்டூழியங்களுக்கு வழி வகுத்து, இந்தியத் தாயின் மார்பில் காயம் ஏற்படுத்தியது காங்கிரஸ்.
பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அவர்களை அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். இந்த வரலாற்றையும், அதன் வேதனையையும் நாடு ஒருபோதும் மறக்காது. பிரிவினையின் கொடூரத்தால் உயிரிழந்தவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி”* என குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது பதிவில்,
“#PartitionHorrorsRemembranceDay நாளில், அவசரமாக நடந்த பிரிவினையும், அதன் காரணமாக ஏற்பட்ட கொடூர வன்முறையிலும் உயிரிழந்தவர்களுக்கும், இந்தியாவில் உதவியற்ற அகதிகளாக வாழ்வைத் தொடங்கிய எனது பெற்றோர்கள் உட்பட அற்புதமாக உயிர் தப்பியவர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். பிரிவினையின் அந்தப் பயங்கரங்கள் என்றும் நினைவில் நிற்கும்” என தெரிவித்தார்.